YSS இளைஞர் சேவைகள் பிரிவு (YSS Youth Services) பிப்ரவரி 2026-இல் பெங்களூரு மற்றும் சண்டிகரில் இளம் சாதகர்களுக்கான முகாம்களை நடத்துகிறது
“வாழ்க்கையின் கொந்தளிப்புகளுக்கு மத்தியிலும் எவ்வாறு மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்பதை அறிய விரும்பும் ஒருவருக்கு, இந்த முகாம் அதற்கான விடையை அளித்தது.”
— டி.எம்., பெங்களூரு
பிப்ரவரி 2026-இல், பரபரப்பான தொழில்நுட்ப மையமான பெங்களூரில் YSS இளைஞர் சேவைகள் பிரிவால் நடத்தப்பட்ட மூன்று நாள் இளம் சாதகர் முகாமில் தான் பெற்ற அனுபவத்தை ஒரு இளம் பக்தர் இவ்வார்த்தைகளில் சுருக்கமாகக் கூறுகிறார். இதேபோன்றதொரு முகாம் ஒரு வாரத்திற்குப் பிறகு சண்டிகரிலும் நடைபெற்றது; அங்கு YSS பாதையைப் பின்பற்றும் சக வயதுடையவர்களுடன் இணைந்து, ஆன்மீக ரீதியில் புத்துணர்ச்சி மற்றும் புதுப்பித்தலைப் பெறும் வார இறுதி நிகழ்வில் இளம் சாதகர்கள் பங்கேற்றனர்.
18 முதல் 35 வயதுக்குட்பட்ட YSS பக்தர்களுக்கு, குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் எப்படி வாழ வேண்டும் குறித்த போதனைகளை எடுத்துச் செல்லும் நோக்கில், இந்த மண்டல அளவிலான இளம் சாதகர் முகாம்கள் ஒரு புதிய முயற்சியாகத் தொடங்கப்பட்டுள்ளன. நவீன வாழ்க்கையின் இடைவிடாத பரபரப்பிலிருந்து விலகி, அமைதியான சூழலில் தங்களைத் தாங்களே கண்டறிய இம்முகாம்கள் அவர்களுக்கு உதவுகின்றன.
பணியில் உள்ளவர்கள், மாணவர்கள், இளம் பெற்றோர்கள் மற்றும் பிறர் என 180-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த வார இறுதி முகாம்களில் பங்கேற்றனர். இவர்களில் பலர், நேரம் மற்றும் தூரம் சார்ந்த கட்டுப்பாடுகள் காரணமாக, தங்களுடைய பரபரப்பான வாழ்க்கையிலிருந்து நீண்டகால ஆன்மிக முகாம்களுக்காக நேரம் ஒதுக்கி வெளியே செல்வது பொதுவாகக் கடினம் என்று இருந்தவர்கள்.
“இறை- இருப்பில் வாழ்வது”
இளம் சாதகர்களே தேர்ந்தெடுத்த இந்த முகாமின் கருப்பொருள், ஒரு தெளிவான நோக்கத்தை வெளிப்படுத்தியது. நவீன உலகின் சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், இறைவனுடன் உறுதியான பிணைப்புடன் இருப்பதற்கான ஒரு நடைமுறை வழிகாட்டியாக இது அமைந்தது: “இறை – இருப்பில் வாழ்வது.”
பெங்களூரு (பிப்ரவரி 19–22) மற்றும் சண்டிகர் (பிப்ரவரி 26–மார்ச் 1) ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற்றபோது, அங்கு வந்த பங்கேற்பாளர்களின் சோர்வான முகங்கள் விரைவில் மலர்ச்சியடைந்தன. மன அழுத்தம் மற்றும் சமநிலையின்மை நிறைந்த வெளி உலகம் பின்னணியில் மறைந்துபோக, முகாமின் மகிழ்ச்சியான சூழல் அவர்களை ஆட்கொண்டது. முகாமின் அட்டவணை எளிமையானது என்றாலும் ஆழமான நோக்கத்தைக் கொண்டிருந்தது: தியானம், சேவை, ஆன்மீகக் கல்வி, சுய ஆய்வு மற்றும் உடற்பயிற்சி ஆகிய ஐந்து அம்சங்களைக் கொண்ட தினசரி நடைமுறை அது. குருதேவர் போதித்த சமச்சீரான வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட இந்த அமைப்பு, உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவற்றை புத்துணர்ச்சி பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்த ஆன்மீக நடைமுறையில், YSS சன்னியாசிகளின் வழிகாட்டுதலின் கீழ் தினமும் இருமுறை மேற்கொள்ளப்பட்ட ‘சக்தியூட்டும் உடற்பயிற்சிகள்’ மற்றும் கூட்டுத் தியானம் ஆகியவை அடங்கியிருந்தன. ‘ஸ்ரவணம்’ (ஆழ்ந்து கேட்டல்) அமர்வுகள், ‘ஜப நடைப்பயிற்சி’ மற்றும் இயற்கையோடு இணைந்த திறந்தவெளிப் பயணங்கள் ஆகியவை இம்முகாம்களின் சிறப்பம்சங்களாக அமைந்தன.
இந்த அமைதியற்ற உ லகில் ஒரு சமநிலையை இது கொண்டுவருகிறது
சில நாட்களே நடைபெற்ற இம்முகாம்கள், இளம் சாதகர்களுக்கு அகச் சமநிலையை உணர உதவின மேலும் உடல் ரீதியான புத்துணர்ச்சி, மனதிற்கான கல்வி மற்றும் தியானத்தில் ஆழ்ந்து மூழ்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை அவை வழங்கின. யோகானந்தரின் வார்த்தைகளில் பொதிந்துள்ள ஆழமான உண்மை அந்த அரங்குகளில் எதிரொலித்தது:
ஆயிரக்கணக்கானோர் எனது உரைகளைக் கேட்டுள்ளனர்; ஆனால், கேட்டவற்றைச் செயலில் செயல்படுத்தியவர்கள் மிகச் சிலரே. அவ்வாறு செயல்படுத்துபவர்கள், எங்கும் நிறைந்திருக்கும் தெய்வீக அன்பும் மகிமையுமான அந்த உன்னத உண்மையை, தங்கள் சொந்த உணர்வின் வாயிலாக என்றென்றும் வெளிப்படுவதைக் காண்பார்கள்.
— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்
ஸ்வாமி நிர்மலானந்தா,ஸ்வாமி சங்கரானந்தா மற்றும் பிரம்மச்சாரி சௌம்யானந்தா ஆகியோர், ‘எப்படி வாழ வேண்டும்’ வகுப்புகளில் மூத்த மற்றும் இளம் சாதகர்களின் குழுக்களுக்கு வழிகாட்டினர். நிஜ வாழ்க்கை உதாரணங்கள், கவிதைகள் மற்றும் பகிர்ந்துகொள்ளப்பட்ட கதைகள் நிறைந்த கலந்துரையாடல் சார்ந்த பயிலரங்குகள் மூலம் இந்த வழிகாட்டல் நடைபெற்றது. தங்கள் ஆன்மீகப் பயணம் தனிமையானதாகவோ அல்லது தனித்து மேற்கொள்ளப்பட வேண்டியதாகவோ இருக்க வேண்டியதில்லை என்பதை உணர்ந்த இளைஞர்கள், தங்கள் சவால்களைக் குழுவிடம் தயக்கமின்றிப் பகிர்ந்துகொள்ள முடிந்தது.
“…ஒரே மாதிரியான ஆற்றல் நிலைகளைக் கொண்ட, வாழ்க்கையில் ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்ளும் இளைஞர்கள் குழுவாக ஒன்றுகூடிய அந்த நிகழ்வு மிகவும் ஈர்ப்புடையதாக இருந்தது.”
— கே.எஸ்., சண்டிகர்
இளம் பக்தர்களுக்கும், குறிப்பாக ‘யோகதா சத்சங்க பாடங்கள்‘ வகுப்பில் சமீபத்தில் இணைந்தவர்களுக்கும் இந்த முகாம்கள் பல நன்மைகளை அளித்தன. அவற்றில் முக்கியமானது, சன்னியாசிகளால் நடத்தப்பட்ட YSS தியான உத்திகள் குறித்த மறுஆய்வு ஆகும். மேலும், அந்த உத்திகளைப் பயிற்சி செய்வது குறித்த கருத்துகளையும் ஆலோசனைகளையும் பக்தர்கள் சன்னியாசிகளிடமிருந்து பெற முடிந்தது.
“நான் பயிற்சிகளைச் சரியான முறையில் செய்கிறேனா என்பதில் எனக்குத் தெளிவு இல்லை. கேள்விகளைக் கேட்டு சன்னியாசிகளிடமிருந்து கற்றுக்கொள்ள இந்த முகாம் எனக்கு வாய்ப்பளித்தது; அதோடு, அங்கு நிலவிய சமூக உணர்வு கூடுதல் சிறப்பம்சமாக அமைந்தது.”
— எம்.எஸ்., கர்நாடகா
ஸ்ரவண மற்றும் சத்சங்கம்: கற்றல் மற்றும் நல்லுறவு
ஸ்ரவணத்தின் போது, ஒவ்வொரு காலையிலும், பங்கேற்பாளர்கள் குழுக்களாக அமர்ந்து, ‘YSS பாடம் 15: சரிசமநிலையான ஆன்மீக வாழ்க்கைக் கலை‘ என்பதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை அமைதியாகப் பயில்வார்கள். இது குருவின் போதனைகளைப் பயில்வதன் மூலம் அவருடன் ஒருமைப்பாட்டை அல்லது இணக்கத்தை ஏற்படுத்தும் பயிற்சி ஆகும்.
சாதகர்கள், அன்றே அந்த உண்மைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதைப் பகிர்ந்துகொள்வதற்கு முன், ஆழ்ந்த மௌனத்தில் அந்த ஞானத்தை உள்வாங்க முயன்றனர்.
“எங்கள் சாதனையின் ஆழமான மற்றும் தீவிரமான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள ஸ்ரவணம் எங்களுக்கு உதவியது.”
— பி.எம்., பெங்களூரு
இளம் சாதகரை அடிக்கடி வாட்டும் தனிமை, சத்சங்கம் அல்லது தோழமையின் அரவணைப்பில் மறைந்து போனது. திட்டமிடப்பட்ட முகாம் அமர்வுகளுக்கு இடையில், ஒன்றாகப் பயணித்த கார்கள், அமைதியான மாலை நேரத் தெருக்களில் நடந்த சிறு நடைப்பயணங்கள் அல்லது நிதானமான பேருந்துப் பயணங்கள் போன்றவற்றின் மூலம் வாழ்நாள் பந்தங்கள் தன்னிச்சையாக உருவாயின.
ஒரு பக்தர் அந்த உணர்வை இவ்வாறு சுருக்கமாகக் கூறினார்:
“[இந்த முகாம்] வீட்டிற்குத் திரும்பியது போன்ற உணர்வைத் தருகிறது.”
— கே.ஏ., சண்டிகர்
ஆன்மா மற்றும் இயற்கை: ஆன்மீகப் பயிற்சிக்கு ஏற்ற ஓர் உகந்த சூழல்
‘வெளிச் சுற்றுலா நாளில்’, வார இறுதி முகாமின் செயல்பாடுகள் திறந்தவெளிக்கு மாற்றப்பட்டன; இதன் மூலம் ஆன்மீகப் பயிற்சிகள் தியானக்கூடங்களுக்கு அப்பால் விரிவுபடுத்தப்பட்டன
பெங்களூருவில்: இளம் சாதகர்கள் அழகிய வெளிப்புறத் தோட்டங்களில் கூடினர். மரங்களின் நிழலில் அமர்ந்து அவர்கள் தியானம் செய்தனர் மற்றும் கீர்த்தனைகளைப் பாடினர். புல்வெளியில் அமர்ந்து, YSS சன்னியாசிகளுடன் ஒரு முறைசாரா, வெளிப்படையான கேள்வி-பதில் அமர்வில் பங்கேற்றனர்.
சண்டிகரில்: சாதகர்கள் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட, கண்கவர் ‘டில்லான் பண்ணை’க்குச் (Dhillon Farms) சென்றனர். நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்ட தோட்டங்களுக்கு நடுவே அவர்கள் நடைபயிற்சி மேற்கொண்டனர், கைப்பந்து விளையாடினர் மற்றும் மகிழ்ச்சியுடன் உரையாடினர்; இவ்வாறு தெய்வீகச் சிந்தனையுடன் தூய மகிழ்ச்சி நிறைந்த தருணங்களையும் அவர்கள் அனுபவித்தனர்.
மாலை வேளையில், ஆன்மீகத் தேடலில் உள்ளவர்கள் துறவிகளுடன் இணைந்து விறுவிறுப்பான ‘ஜப நடைபயிற்சி’யை மேற்கொண்டனர். உடற்பயிற்சி மற்றும் ஆழ்ந்த சுவாசத்துடன் இறைவனின் திருநாமத்தை அமைதியாகவும் சீரான தாளத்துடனும் உச்சரித்து, வரவிருக்கும் இரவுப் பொழுதிற்காகத் தங்கள் மனதையும் உடலையும் அவர்கள் தயார்படுத்திக்கொண்டனர்.
“சுற்றுலா சென்ற இடம் மிக அற்புதமாக இருந்தது. அந்த இயற்கையான சூழலில் ஒன்றாகக் கீர்த்தனைகளைப் பாடுவதும், சன்னியாசிகள் கேள்விகளுக்குப் பதிலளிப்பதைக் கேட்பதும் ஒரு பாரம்பரிய குரு-சீடர் அனுபவத்தைப் போல இருந்தது.”
— எஸ்.பி., மும்பை
அன்பின் ஒரு பெருவெள்ளம்
தியானம் மற்றும் கீர்த்தனை இடம்பெற்ற நிறைவு நிகழ்ச்சியில், ஹார்மோனியம் இசைக்கத் தொடங்க, கைத்தாளங்கள் சீரான ஒலியை எழுப்ப, அந்தச் சூழலே மறுக்க முடியாத, ஒன்றிணைந்த பக்தி அதிர்வால் நிரம்பியது. கீர்த்தனைப் பாடல்களின்போது சன்னியாசிகள் கூடியிருந்த பக்தர்களை வழிநடத்தினர்.
“சன்னியாசிகளால் மிகச் சிறப்பாகப் பேசவும் கற்பிக்கவும் முடியும்; ஆனால், கீர்த்தனைகளைப் பாடும்போதுதான் கடவுள் மீதான அவர்களின் அன்பும் பக்தியும் உண்மையாக வெளிப்படுகிறது. அந்தத் தருணத்தில்தான், அவர்கள் தங்கள் தியானத்தின் மூலம் கடினமாகப் பெற்ற ஆன்மீகப் பலன்கள் தாராளமாகப் பகிரப்படுகின்றன.”
— எஸ்.டி., சண்டிகர்
இசை மெல்ல மெல்ல அடங்கி அமைதி நிலவியபோது, அந்த அமைதி ஆழ்ந்ததாகவும் இனிமையானதாகவும் இருந்தது. தாங்கள் கண்டடைந்த அந்த ஆழ்ந்த அமைதியைக் கலைக்க விரும்பாத பலரும், நிகழ்ச்சி முடிந்த பிறகும் நீண்ட நேரம் தங்கள் தியான இருக்கைகளிலேயே அமர்ந்திருந்தனர்.
முகாம்கள் நிறைவடைந்தன, பயணப் பைகள் கட்டப்பட்டன; இளம் சாதகர்கள் தங்கள் அலுவலகங்கள், வகுப்பறைகள் மற்றும் இல்லங்களுக்குத் திரும்பினர். ஆனால் அவர்கள் ஒரு புதிய மாற்றத்துடனேயே திரும்பினர். சமச்சீரான வாழ்க்கைக்கான வழிமுறைகள், ஆன்ம நேயர்களின் நட்பு வட்டம் மற்றும் அமைதி என்பது எட்டாக்கனி அல்ல — அது பயிற்சியின் மூலம் உள்ளிருந்தே மலரக்கூடியது — என்ற ஆழமான நேரடி அனுபவ உணர்வு ஆகியவற்றுடன் அவர்கள் திரும்பினர்.
‘இளம் சாதகர்’ சமூகத்தில் இணைய ஓர் அழைப்பு
நீங்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட YSS பக்தராக இருந்து, இந்தியா முழுவதும் உள்ள சக இளம் சாதகர்களுடன் இணைய விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள ‘இளம் சாதகர்கள் பங்கேற்புப் படிவத்தை’ (Young Sadhaks’ Participation Form) பூர்த்தி செய்யுமாறு உங்களை அழைக்கிறோம். இதன் மூலம், இச்சமூகத்திற்கான வரவிருக்கும் இணையவழி மற்றும் நேரடி ஆன்மீக நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை நீங்கள் அறிந்துகொள்ளலாம். தன்னார்வலர் ஒருவர் உங்களைத் தொடர்புகொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டுவார்.




















